பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

எனது குறுங்கவிதைகள் இங்கே.......................



இன்னும் சில நட்புக் கவிதைகள்

சக்கரத்தின் கம்பிகளில்
தொங்கிக்கொண்டு சுழலும்
உன்னை என் நட்பென்ற
சுழியாலே காத்திடுவேன்..
நீ சிரித்திடுவாய்..


ரசத்தின் காரம் மிகும்போது
சிரம் தட்டுவாய் நண்பனே!
அந்த அதிர்ந்த ஒலியிலும்
கலந்து இருப்பேன் நட்பாக...


நீ அள்ளிய மணற்துகள்களிலும்
பருகிய நீர் நிலைகளிலும்
நெகிழ்ந்த நெருப்புக் கனலிலும்
ஆகாயத்தின் பிரவேசத்திலும்
கலந்து இருப்பேன் உன் தோழியாக...


நெருக்கமான இலைகளின் மத்தியில்
அமர்ந்து ஆடிக் காற்றில்
ஆனந்தமாய் ஆடும் தெய்வீகம்
உனக்கும் எனக்குமான நட்பு


ஒரு தள்ளாட்டத்தில்
உன் கைகளைப் பற்றி
ஊன்றுகோலாய் உன் கால்களாய் மாறும்
என் நிலையா உண்மையான நட்பு
என்று சொல்கிறாய்?....


நவீன ஓவியத்தின் தந்தையும்
குழம்பும் நவீன ஓவியம்
நம் நவீன நட்பு..


ஓர் நட்புக் குடுவையில்
ஹைட்ரஜனாக மிதக்கிறேன்..
நீ  இல்லாவிடில் பறந்திருப்பேன்
ஒரு பலூனாக...

தோட்டத்தில் இரைத்துவிட்ட
பூக்களாய் என் நட்பு இரைந்துகிடக்கிறது.
ஒவ்வொன்றாய் எடுத்து
உன் இதயத்தில் பொருத்து.
இறுதி வரும் முன்னே
மீண்டும் இரைக்கச் சொல்வேன்
நட்பென்ற மரத்தை..


விண்ணில் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறாய்
ஏதாவது ஒரு நட்சத்திரமாக
ஒவ்வொன்றாக துலாவுகிறேன்
நீ எங்கே என்று.
நான் ஒரு பைத்தியக்காரி..
என் பின்னே நீ வால்நட்சத்திரமாய்
சுற்றுவதை அறியாமல் போகிறேனே!


தேனில் குழைத்த ஒரு மயிலிறகின்
இழைகளை நீ தந்த மாத்திரம்
என் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருப்பேன்
ஒவ்வொருமுறையும் திறக்கும் போது
நெடியுடன் உன் நினைவும் தாலாட்டும்..

உடைந்து போன குயில்
உன்னை அழைத்து பாட சொல்கிறதா?
தனக்குரிய தனிச்சிறப்பை கொக்கு
தவிக்கவிட்டு உன்னிடம் தேடுகிறதா?
நொடிந்துபோன மயில்
உன்னை அழைத்து ஆடச் சொல்கிறதா?
என்னை மட்டுமே நினை!
நட்பின் சிறப்பும் அதுதான்.


மேகங்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் தோழனா?
மின்னல்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் காதலனா?
இடியும் மழையும் இணைந்து கேட்டது
அவன் உன் கணவனா?
என்னிடம் வார்த்தை இல்லை
இந்த ஜடங்களுக்கு பதில்சொல்ல..

கொய்தது பிச்சி @ 6:51 AM, ,




நட்புக் கவிதைகள்

ஒட்டமுடியாத துருவங்களாய்
ஒட்டிக்கொண்டு வாழ்வாயா?

காதல் என்கிறாய்!
என் விழியைத் திருடி,
நட்பு என்றாய்,
மொழியை வருடி,

அதரத்தின் பாஷைகள்
அறியாமல் போனதினால்
அறியாமல்
ஆழத்தோண்டுகிறாய்
அன்புக் கிணறு.
அன்பு நண்பனே!
அகழி என்று வெட்டுவது சரிதான்
அது நீர்க்குமிழிதான்...
அன்றி, வெட்டுவது நிறுத்து.
அன்பை நட்பாலே பொருத்து...


--------------------

வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?


----------------------------


கொய்தது பிச்சி @ 6:52 AM, ,




நட்புக் குறுங்கவிதை

விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

----------------------

கருவிழி வளையங்களின்
பார்வைக் கணைகளைத்
தாங்கித் தாங்கியே ஆனாலும்
நெஞ்சு நிமிர்ந்து
நடக்கிறது
என் காதலை மீறிய நட்பு.

---------------------

நெருக்கமான ரேகைகளைப் போல்
பிணைப்பே
உண்மையான நட்பு

----------------

மிஞ்சத் தூண்டுதா நட்பு?
கெஞ்சத் தோன்றுதா நட்பு?
வஞ்சத்தை எறியுமே நட்பு
நெஞ்சத் தகநக நட்பு

---------------------

ஏதாவது ஒரு மரத்தின்
நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு
முல்லைக் கதைகள் பேசி,
கைகோர்த்து, இலைகளை உதிர்த்து
பூக்களை சபித்து,
பிழை கருதி நெருக்கமின்றி
மரப்பட்டைகளை உரித்தவாறு
கணைகளை நீக்கி
என் விழிகளின் வழி
என் உள்ளம் சென்று
காணுவாய்!

உன் உயிர் அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
மீண்டும் வந்துவிட்டு என்னோடு பேசுவாய்
கை கோர்ப்பாய்!
உள்ளத்தில் என்றென்றும் உன்னை
தூக்கத்திலேயே வைத்திருக்கிறேன்,,, நண்பா!
விழித்துவிட்டால் இதயத்தை நோண்டுவாய் என்று!!!



கொய்தது பிச்சி @ 6:39 AM, ,




நட்புக் கவிதை

அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
இடையில்
இழைந்தோடுமே
நட்பு

----------------------

மகிழம்பூ வாசனை நெடியில்
தேன் கலந்த
இனிமையான துகள்களின்
ருசியே உனக்கும் எனக்கும்
உண்டான நட்பு

------------------

விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.

------------------

பருக்கையின்
பிளவுக்குள்ளே
பொத்தி வைக்கப்பட்டிருக்கும்
அரூப அன்பே
காரணமில்லா நட்பு


--------------

ஒரு கை மண்ணின்
எண்ணிலடங்கா துகள்களில்
ஒளிந்திருக்கும் காந்தமே
உலகத்தில்
உலாவும்
உன்னதமான நட்பு


--------------

தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு


----------

தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு


கொய்தது பிச்சி @ 9:15 AM, ,




காதல்

ரூபாய்த் தாள்களில்
ஒளிந்திருக்கும்
வாட்டர் மார்க்கைப் போல்
நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மேட்டர் தான் காதல்.........

கொய்தது பிச்சி @ 8:39 PM, ,